காரில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருக்கோவிலூர் அருகில் கண்டாச்சிபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை, 18 சாக்கு மூட்டைகளில் பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து காவல்துறையினர் கார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் அனந்தபுரம் கிராமத்தில் வசித்து வரும் காசிநாதன் என்பவருடைய மகன் சங்கர்(35) என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகில் பெரிய ஓலைப்பாடி பகுதியிலிருந்து அனந்தபுரத்திற்கு காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்புடைய அனந்தபுரத்தில் உள்ள ஏழுமலை, அஜித் ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 218 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ 2,18,000 இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா புகையிலைப் பொருட்களை நேரில் சென்று பார்வையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை பாராட்டியுள்ளார்.