கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 17 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் சிறுமியை அவரது தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது டாக்டர் பரிசோதனை செய்து சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் செண்பகராமன்புதூர் பகுதியில் வசிக்கும் ஆதி கண்ணன் என்பவரை காதலித்ததாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கும், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆதிக்கண்ணன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் ஆதி கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.