தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகமும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விநியோகம் செய்யப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.