சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு நேற்று முன்தினம் இரவே 7,000 டன் காய்கறிகள் வந்து இறங்கியுள்ளது. நெல்லை, உதகை, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள் வந்து இறங்கியதால், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்துள்ளதாகவும், இருந்த போதிலும் 3,000 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதாகவும் கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.