பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற இருக்கிறது .
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வராக காமராஜர் 9 1/2 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சியில் தான் கல்வியில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மக்களுக்காக பஞ்சாயத்து ராஜ், பள்ளி குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டம், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சி, மின் திட்டம் மற்றும் பாசன திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்த திட்டங்கள் மூலம் தமிழகமானது வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்றது. இதனால்தான் காமராஜர் ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் காமராஜர் ஆட்சி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற இருக்கிறது. இந்த கருத்தரங்கமானது ஜூலை 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கருத்தரங்கம் காமராஜரின் வாழ்க்கை முறை, அவரின் சாதனைகள் மற்றும் அவர் கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கைகளை போன்றவற்றை இளைய சமுதாயத்தினர் அறியும் விதத்தில் நடத்தப்படும். இதனையடுத்து ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும். எனவே இந்த கருத்தரங்கில் தமிழக மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியிருந்தார்.