சாக்சி மாலிக் செப்டம்பர் 3 ம் தேதி 1992 ஆம் வருடம் பிறந்துள்ளார். இவர் இந்திய மற்போர் வீராங்கனை ஆவர். இவர் கிளாஸ் கோவில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுகளில் பெண்கள் கட்டற்ற வகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 2014இல் தாஷ்கந்தில் நடைபெற்ற உலக மற்போர் போட்டிகளில் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது. 8வது நாளான இன்று இந்திய வீரர் வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்றுள்ளது.
இதில் முன்னதாக நடைபெற்ற கால் இறுதி மற்றும் அர இறுதி போட்டிகளில் இந்தியாவின் தீபக் புனியா,சாக்சி மாலிக், அன்ஷூ மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா போன்றோர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டிக்குள் நுழைந்து 4 போட்டியாளர்களும் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இறுதி போட்டிகள் நடைபெற்றுள்ளது. முதலாவதாக நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
அதன் பின் நடைபெற்ற ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலமாக 7 வது தங்கப் பதக்கத்துடன் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான 62 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் சாக்சி மாலிக் கனடாவைச் சேர்ந்த கோடினெஸ் கோன்சலஸை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். இதன் மூலமாக 8 வது தங்கப் பதக்கத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.