நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வசித்து வருபவர் விஜய்ரூபன். நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக உள்ள விஜய்ரூபன், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவருக்கும் இவர் காதலித்த பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் வரை அவரின் பெற்றோர் சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய்ரூபன், காதலிக்கும் போது அந்தப் பெண்ணுடன் எடுத்தப் புகைப்படம், அவர் கொடுத்த காதல் கடிதம் என அனைத்தையும் போஸ்டராக அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த விவகாரம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை வீட்டிற்கு தெரியவர, அவர்கள் பெண்ணின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை விஜய்ரூபன் மீது களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விஜய்ரூபனை தீவிரமாக தேடி வருகின்றனர்.