புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திம்மணநல்லூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முத்து துர்காதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முத்து நீளமான இரும்பு கம்பியை வளைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.