காதல் மனைவி தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாகுறிச்சி கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் பிரகாஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அருள் பிரகாஷ் தனது காதலியான 19 வயது இளம்பெண்ணை விருதாச்சலத்தில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது இளம்பெண் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பு படித்து முடித்துவிட்டு அருள் பிரகாஷூடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அவர் கட்டிய தாலி மற்றும் மெட்டியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் பிரகாஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அருள் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.