கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மினி பேருந்தின் ஓட்டுனர் சிபின் என்பவர் சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.
சுஜிலா இறந்த பிறகும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்பை போலீசார் எடுத்து பேசியுள்ளனர். அப்போது சிபின் கோபத்தில் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் சிபினை பிடித்து விசாரணை நடத்த முயன்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே சுஜிலா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் சிபியின் தன்னை ஏமாற்றியதாகவும், கணவர் ஆனந்தத்தை குறிப்பிட்டு “ஐ மிஸ் யூ புருஷா” எனவும், குழந்தைகளை சாக்லேட் சாப்பிடாமல் பார்த்து கொள்ளுங்கள் எனவும் எழுதியுள்ளார்.
மேலும் போலீசார் கூறியதாவது, அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் சுஜிலாவுக்கு சிபினுடன் பழக்கம் ஏற்பட்டது. இரவு நேரத்திலும் அவர் சுஜிலாவிற்கு போன் செய்து தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சுஜிலா வெளிநாடு செல்வதை சிபின் விரும்பவில்லை. நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு கொடுத்ததால் மன உளைச்சலில் சுஜிலா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தலைமறைவான சிபினை நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.