தன்னுடன் சண்டை போட்ட காதலியை சமாதானப்படுத்துவதற்காக விலையுயர்ந்த பொருட்களை திருடி அதனை பரிசாக அளித்த காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள சரோஜினி நகரில் வசித்து வருபவர் ஆதித்யா குமார். இவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் தனியாக இருக்கும்போது 3 மர்ம நபர்களால் கட்டிப் போடப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவரது வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களான செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ஆதித்யா குமார் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சரோஜினி நகரில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 3 நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆதித்யா குமாரிடம் திருடியது அந்த மூன்று பேர்தான் என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் 3 பேரின் பெயர்கள் ஷம்ஹம் (20), ஆசிப் (19), முகமது ஷரிபுல் முல்லா (41) என்பதாகும். இதில் ஷம்ஹம் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அந்தப் பெண் ஷம்ஹமுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தனது காதலியை சமாதானப்படுத்த விலை உயர்ந்த பொருட்களை பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார் ஷம்ஹம்.
ஆனால் தன்னிடம் விலை உயர்ந்த பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து விலையுயர்ந்த பொருட்களை திருடலாம் பின்னர் அதனை காதலிக்கு பரிசாக அளிக்கலாம் என திட்டமிட்டுள்ளனர் . இதற்காக ஆதித்யா குமாரின் வீட்டில் சென்று திருடும் உள்ளனர் என்ற தகவலை போலீசார் அவர்களிடமிருந்து பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஷம்ஹம் மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.