காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையை 3 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் ஈச்சவிளை பகுதியில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜின்(20) என்ற மகன் உள்ளார். இவர் தொலையாவட்டம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அஜின் மாங்கரை செங்கிட்டான்விளை பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரின் மகளை காதலித்தது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. நேற்று அஜின் தனது நண்பர்களான ஜோஸ் சிஜூ ஆகியோருடன் இணைந்து கருங்கல் பகுதியில் வைத்து தனது காதலியை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
இதனை பார்த்த பெண்ணின் தந்தை வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த 3 பேரும் அரிவாளால் பெண்ணின் தந்தையை வெட்டியுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அஜின் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அஜின் மற்றும் ஜோஸ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சிஜூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.