காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞன் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர் கார்டன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஐஸ்வர்யா வீட்டுக்கு தெரியவந்ததும் அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனால் அவர் ரதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதில் கோபமடைந்த ரதீஷ் ஐஸ்வராயா வீட்டிற்கு சென்று மீண்டும் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் கோபம் கொண்ட ரதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐஸ்வர்யாவை குத்திவிட்டு ஓடியுள்ளார். அப்போது ஐஸ்வர்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தைக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஐஸ்வர்யா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பேரூர் காவல்துறையினர் தப்பியோடிய ரதீஷை தேடி வருகின்றார்கள்.