திருமண மண்டபத்தில் இருந்து தனது காதலியுடன் மாப்பிள்ளை ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் உமாபதி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கும் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து சதீஷ்குமார் அந்த பெண்ணிடம் சரியாக பேசவில்லை. போன் செய்தாலும் பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டுள்ளனர். அவர்கள் சரியான காரணத்தை சொல்லவில்லை.
இந்நிலையில் முறைப்படி பத்திரிக்கை அடித்து அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கொட்டமேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கியது. அப்போது வரவேற்பு நிகழ்ச்சியில் சதீஷ்குமார் கலந்துகொண்டு மணப்பெண்ணுடன் புகைப்படம் எடுத்துள்ளார். காலை திருமண மேடையில் ஐயர் தாலி, தேங்காய் பூ மாலை வைத்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். இதனையடுத்து ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள் எனக் கூறியுள்ளார். அப்போது உறவினர்கள் மாப்பிள்ளை அழைப்பதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மாப்பிள்ளையை காணவில்லை.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மண்டபம் முழுவதும் தேடியுள்ளனர். அப்போது மாப்பிள்ளை மண்டபத்திலிருந்து தான் காதலித்த பெண்ணுடன் ஓடியது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் கண்கலங்கி பெரும் சோகத்தில் இருந்துள்ளனர். மேலும் இது குறித்து நாங்கள் 40 சவரன் தங்க நகை, ஏசி, கட்டில், பீரோ, சிசி. யமகா பைக் போன்ற அனைத்து சன்மானங்களையும் கொடுத்தோம். ஆனால் எங்களை மாப்பிள்ளை வீட்டார் ஏமாற்றி விட்டார்கள் எனக்கூறி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.