திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கஸ்பா அய்யலூர் பகுதியில் செந்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சிதா மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 29-ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். அதன் பின்பு அவர் திரும்பிவரவில்லை. இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ரஞ்சிதாவை காவல்துறையினர் தேடி வந்தனர். மேலும் ரஞ்சிதாவின் செல்போனை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் ஆர்.புதுக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரும், ரஞ்சிதாவும் செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அவர் டிரைவர் என்பதும் தெரிந்தது. மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் வெளியானது. அதாவது ரஞ்சிதாவுக்கும், ராஜ்குமாருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. மேலும் அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் ரஞ்சிதாவை எரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்தனர்.
மேலும் அவர் கூறிய வாக்குமூலத்தில் ரஞ்சிதாவுக்கும், தனக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், அதனால் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நான் வேடசந்தூரை அடுத்த கோலார்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு கடந்த 29-ஆம் தேதி ரஞ்சிதாவுடன் சென்றேன். அங்கு எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதனால் நான் ரஞ்சிதாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்று விட்டேன் என்று தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் ரஞ்சிதா எரித்துக்கொலை செய்யப்பட்ட பகுதியில் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.