கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதபடுத்தி வருவதால் வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பண்ணைபுரம் மலையாடிவார பகுதியில் கோட்டமலை, தீக்குண்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இதனைதொடர்ந்து நேற்று பண்ணைபுரம் பகுதியில் 4 காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிடபட்டிருந்த வாழைகளை சேதபடுத்தியுள்ளது.
மேலும் அங்கிருந்த விவசாயிகள் யானையை பார்த்து அச்சமடைந்து ஊருக்குள் ஓடி வந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டுயானைகள் கிராமத்திற்குள் வாராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.