வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதால் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரும்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் கூறும்போது, பெரும்பள்ளம் வனச்சரக பகுதிக்கு அருகே தனியார் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாகப் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
சுமார் 25-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பலனாக நேற்று காலை வனப்பகுதியில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதற்கிடையில் காட்டுத்தீ ஏற்பட்டதால் வந்த புகை மூட்டத்தில் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் காட்டுப்பன்றி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் மலைகளிலும், விவசாய நிலங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளது.