தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது.
அத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்களை காசிக்கு இலவசமாக அழைத்துச் செல்வதற்கும் சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாரணாசி செல்பவர்களின் வசதிக்கு ஏற்ப இராமேஸ்வரம் மற்றும் வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 16 ,23 , 30 மற்றும் டிசம்பர் 7,14 ஆகிய தேதிகளில் மூன்றடுக்கு ஏசி வசதி கொண்ட மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது