காங்கயம் அருகே அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பாரதியார் வீதியில் வசித்துவரும் குணசேகரன் என்பவரின் மனைவி பானுஸ்ரீ கார்த்திகா. இவர்களுக்கு ஏழு வயதில் மகன் ஒருவர் இருக்கின்றார். பானுஸ்ரீ கார்த்திகா அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் சென்ற 12ஆம் தேதி குணசேகரன் மற்றும் அவரின் மகனும் நண்பர்களுடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு சென்று விட்டார்கள். பானு ஸ்ரீ கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கின்றார்.
குணசேகரன் நேற்று முன்தினம் காலையில் மனைவியிடம் போனில் பேசிய தாக கூறப்படுகின்றது. அதன்பின் பானுஸ்ரீ கார்த்திகாவை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் மாலை குணசேகரன் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் காம்பவுண்ட் கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தவர் சத்தம் போட்டு பானுஸ்ரீ கார்த்திகாவை கூப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் வராததால் வீட்டின் காம்பவுண்ட் மேல் ஏறி குதித்து வீட்டின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த பொழுது பானுஸ்ரீ கார்த்திகா தூக்கில் தொங்கி கொண்டிருந்த நிலையில் அக்கம்பக்கத்தினரை கூப்பிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் பானுஸ்ரீ கார்த்திகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததையடுத்து காங்கயம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.