காண்ட்ராக்டரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் மர்ம நபர்கள் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தியாகராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 4 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தியாகராஜனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை சாலையில் போட்டு விட்டு உங்களது பணம் கீழே விழுந்துவிட்டது என தியாகராஜனிடம் கூறியுள்ளனர்.
இதனால் தியாகராஜன் தனது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தியாகராஜனுக்கு சொந்தமான ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தியாகராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.