மனைவி தனது கள்ளக்காதலன் உள்பட 3 பேருடன் இணைந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடாரன்கொட்டாய் கிராமத்தில் செங்கல் சூளை காண்டிராக்டரான கோவிந்தன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கவிதா யாருடன் பேசுகிறார் என்பதை கண்காணித்து வந்தனர். அப்போது தனசேகரன் மற்றும் சிலருடன் கவிதா அடிக்கடி பேசியது தெரியவந்தது.
இதனை அடுத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன், இளையராஜா, பழனிசாமி மற்றும் கவிதா ஆகிய நான்கு பேரையும் போலீசார் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கோவிந்தன் குடும்பத்துடன் ஆந்திராவில் வசித்து வந்துள்ளார். இதனால் செங்கல் சூளை பணிக்காக இளையராஜா, தனசேகரன், பழனிச்சாமி ஆகிய மூன்று பேரையும் முன்பணம் கொடுத்து கோவிந்தன் ஆந்திராவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது தனசேகரனுக்கும், கவிதாக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலராக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த கோவிந்தன் கவிதாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்து விட்டார். இதனை அடுத்து கொடுத்த முன் பணத்தை கேட்டு தனசேகரன் உள்ளிட்ட மூன்று பேருடன் கோவிந்தன் தகராறு செய்துள்ளார். அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதற்கு கவிதா தான் காரணம் எனக்கூறி கோவிந்தன் கவிதா உடன் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து கணவர் டார்ச்சர் செய்ததால் தனசேகரன், கவிதா, பழனிச்சாமி, இளையராஜா ஆகிய நான்கு பேரும் இணைந்து கோவிந்தனின் வாயை பொத்தியும், கழுத்தை இறுக்கியும், மர்ம உறுப்பை சேதப்படுத்தியும் கொலை செய்துள்ளனர். நேற்று நான்கு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.