பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எஸ்.என் ஹைரோடு பொருட்காட்சி திடலின் எதிரிலிருக்கும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் பள்ளியில் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நீதிபதி செல்வகுமார் மற்றும் ஜான் கென்னடி ஆகிய 2 பேரையும் வருகிற 31-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நெஞ்சுவலி காரணமாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞானசெல்வியை நீதிபதி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதனை அடுத்து உடல்நலம் சரியான பிறகு தலைமை ஆசிரியர் கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்படுவார்.