காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அருகே மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வரும் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் போன்ற வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள சிங்கம்பதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் வீட்டின் அருகே இருந்த கழிவறைக்கு சென்றார். இவரை மறைந்திருந்த யானை ஒன்று திடீரென துரத்த ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அப்போது தவறி விழுந்ததில் முருகனின் காலில் அடிபட்டதால் அவரால் ஓட முடியவில்லை. இதனையடுத்து முருகனை யானை பலமாக தாக்கியது. இவருடைய சத்தத்தை கேட்ட கிராம மக்கள் உடனடியாக ஓடி வந்து காட்டு யானையிடமிருந்து முருகனை காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து முருகனை மீட்டு கிராம மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.