சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக முதியவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்கரசம்பாளையம் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான சோமன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை வீட்டின் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோமனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றம் சோமனுக்கு 1000 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.