திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கள் இயக்கத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய நல்ல சாமி, கள் ஒரு உணவுப் பொருள். இதனை போதைப் பொருள் என்று யாராவது நிரூபித்தால் 10 கோடி ரூபாய் அளிக்க தயாராக இருக்கிறோம். அதற்காக பிரச்சார நாட்காட்டி வெளியிட்டு அதற்கான பிரதியும் வெளியிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் வருகின்ற 21 தேதி கள் இறக்கி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதனை அரசு தடுத்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். கள் போதைப் பொருள் என்று நேருக்கு நேராக எங்களுடன் வாதிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் விவாதம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசு உடனடியாக வெளிநாட்டில் எண்ணெய்களுக்கான மானியம் கொடுப்பதையும், நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்வதும் தடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் நியாயவிலைக் கடைகளை அடித்து உடைக்கும் நாள் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதிலும் 108 நாடுகளில் பனை மற்றும் தென்னை மரங்கள் உள்ளன. ஆனால் எந்த ஒரு நாட்டிலும் கள் தடையில்லை. அண்டை மாநிலங்களில் கூட கள் இறக்க தடை இல்லை. இது உலகளாவிய நடைமுறை. தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. அரசு முன்னின்று சந்தைப்படுத்தி வரும் டாஸ்மாக் மதுக்களும், இறக்குமதி மதுக்களும் தேவாமிர்தம் அல்ல.. கள் ஒன்றும் ஆலகால விஷமும் அல்ல எனவும், டாஸ்மாக் மது கொள்முதல் செய்யும் ஆலைகள் ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் புள்ளிகள் உடையது என்பதால் தான் அரசு, கள் இறக்க அனுமதி மறுப்பதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நல்லசாமி விவாதித்தார்.