சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கொடியாலத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது48). இவர் வலிவலம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் வலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொடியாலத்தூரிலுள்ள பாலத்தின் அருகே சாராயம் விற்று கொண்டிருந்த ராமதாஸ் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமதாஸை கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் யாரேனும் இதில் தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.