கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் நாகபஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கஞ்சாவை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலர் கஞ்சாவுடன் சேர்த்து அதிக போதைக்காக கள்ளச்சாராயமும் குடித்துள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 12 பேருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த 12 பேரும் கண்பார்வையை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 5 பேரை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பெல்டி, மருஹூரா, மேகர் உள்ளிட்ட பகுதிகளின் காவல் நிலைய தலைமை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டிலிருந்து கள்ளச்சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பீகாரில் கடுமையான பூரண மதுவிலக்கு சட்டங்கள் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.