Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: மாணவியின் தந்தை தொடுத்த வழக்கு…. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் முதல் உடற்கூறாய்வில் சந்தேகம் இருந்ததால் 2வது முறை உடற்கூறாய்வுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மருத்துவக்குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் எனவும் மாணவியின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து மறுஉடற்கூறாய்வுக்கு அனுமதி வழங்கி உடற்கூறாய்வை விடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மாணவி தரப்பு மருத்துவரை சேர்க்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அதன்பின் மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் இதற்கு மறுப்பு தெரிவித்து, மறு உடற்கூறாய்வுக்கு மட்டும் அனுமதி வழங்கி வழக்கை ஒத்திவைத்தது. இவ்வழக்கின் விசாரணை நீதிபதி பி.ஆர்.ஹவாய் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாணவியின் உடல் மறுகூறாய்வில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்கோரிய மாணவியின் தந்தை தொடர்ந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது நம்பிக்கையில்லை எனவும் இவ்வழக்கை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற மாணவியின் தந்தை கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார். வேண்டுமெனில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என கூறிய நீதிபதி, வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து மாணவியின் தந்தை வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.

Categories

Tech |