கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு பின் 17ஆம் தேதி வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது.. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர்..
இதற்கிடையே தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று பள்ளி தரப்பில் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் வழங்க முடியாது என மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆகியோருக்கு கடந்த 26ஆம் தேதி ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிப்பதாக அறிவித்தார்..
இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தாளாளர் செயலாளர் முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கி இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி வழக்கில் கைதான இரண்டு ஆசிரியர்களும் சேலத்தில் தங்கி இருக்க வேண்டும். மதுரை, சேலத்தில் தங்கி இருப்போர் 4 வாரம் அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் இருமுறை கையெழுத்திட வேண்டும். நிபந்தனை ஜாமீன் பெற்ற ஐந்து பேரும் நான்கு வாரங்களுக்கு பிறகு சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிபதி தெரிவித்த கருத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து இருந்து ஆசிரியர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவியை ஆசிரியர்கள் தற்காலைக்கு தூண்டியதாக எந்தவித ஆதாரங்களும் இல்லை. மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.