போக்குவரத்துத்துறை அமைச்சர் பேருந்துகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்கு அதிக அளவில் பயணிகள் பேருந்தில் செல்வார்கள். இந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும். இருப்பினும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் செல்வார்கள். தமிழகத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்குகிறது. இந்த பேருந்துகளில் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பலமுறை எச்சரித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் சித்திரை திருநாள், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை விசாரிப்பதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தனியார் ஆம்னி பேருந்துகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதை எதிர்பார்க்காத ஓட்டுனர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அமைச்சர் பயணிகளிடம் பேருந்தில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கேட்டார். அதற்கு பயணிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் அளித்துள்ளனர். எனவே அமைச்சர் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித்தர சொல்கிறேன் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
இதனையடுத்து அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் விடுமுறை தினங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை தொகையை திரும்பத தர வைத்துள்ளோம். இதற்கு முக்கிய காரணம் டீசல் விலை உயர்வே ஆகும் என கூறினார். மேலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பனிடம் போக்குவரத்துத்துறை வாங்கப்பட்டு எஸ்.எஸ் சிவசங்கர் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் சிவசங்கர் மக்களிடம் நெருங்கி பழகி பிரச்சினைகளை சரி செய்வதில் பெயர் பெற்றவர். இவர் போக்குவரத்துத்துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.