பெங்களூருவின் புறநகரிலுள்ள சர்ஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொட்ட பொம்மசந்ரா பகுதியில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்வி செலவுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆனதால், வீட்டிலிருந்த 2 சகோதரிகளின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் தொல்லை கொடுத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல், இச்சம்பவம் குறித்து இரண்டு நாட்களாக எந்த புகாரும் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை. இதையடுத்து பொதுமக்கள் கோபமடைந்து போராட்டம் நடத்திய பின்புதான் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து காவல்துறையினர் புகார் பதிவு செய்து உள்ளனர். இத்தாக்குதல் குறித்து ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் சுனில்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையில் ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் சுனில்குமார், இந்திரம்மா போன்றோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதில் 3-வது குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளான சகோதரிகளின் தந்தை, தொட்ட பொம்மசந்திரா அருகேயுள்ள நெரிகா கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி என்பவரிடம் தன் குழந்தைகளின் கல்விக்காக 30 % வட்டிக்கு ரூபாய் 1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனைக் கொடுத்த ராமகிருஷ்ணா ரெட்டி, சுனில் குமார் மற்றும் இந்திரம்மா போன்றோரை உடன் அழைத்துக்கொண்டு பணத்தை திரும்ப கேட்க வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 2 சகோதரிகளிடம் உடனே முழுகடன் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளார்கள். இதனால் சகோதரிகள் தங்களது நிலத்தை விற்று கடனைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர்.
எனினும் அந்த 3 பேரும் வீட்டிற்குள் நுழைந்து 2 சகோதரிகளைத் தாக்கியதோடு, அவர்களின் ஆடைகளை அவிழ்த்து அத்துமீறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர்கள் போலீஸ் நிலையத்தை அணுகி இருக்கின்றனர். இருப்பினும் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா இம்ப்ராபூர் புகார் வாங்க மறுத்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் குற்றவாளிகளுடன் சமரசம் செய்துக்கொள்ளுமாறு இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையில் 2 சகோதரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றிய வீடியோக்கள் சமூகஊடகங்களில் வைரலாக பரவியது. இதனால் காவல்துறை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இறுதியில் பாதிக்கப்பட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர்களின் புகாரை எடுத்து கொண்டனர்.