மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதை எடுத்து தமிழகத்திலும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பிளஸ் 2 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற நடத்தும் தேர்வு முடிவு வெளியாகும் வரை சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வழக்கு தொடரவும் தடை இல்லை என அவர் தெரிவித்தார்.