ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி கல்லூரி நிர்வாகத்தை மிரட்டிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராமகிருஷ்ணா நகர் 3-வது வீதியில் முகமது அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு முகமது கோவையில் இருக்கும் ஜி.ஆர்.டி கல்லூரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் எனக்கு தெரிந்தவர்களை சேர்க்க சீட் தர வேண்டும் எனவும், அப்படி தரவில்லை என்றால் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் முகமது அல் அமீன் போலியான ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. இவர் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி சீட்டு கேட்டு கல்லூரி நிர்வாகத்தினரை மிரட்டியுள்ளார். இவர் மீது வேப்பெரி காவல் நிலையத்திலும், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திலும் மோசடி வழக்குகள் இருக்கிறது. இதனை அடுத்து தன்னை நீதிபதி என அறிமுகப்படுத்தி ஒருவரை மிரட்டிய வழக்கில் ஏற்கனவே முகமது அல் அமீன் சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து திருப்பூரில் பதுங்கியிருந்த முகமது அல் அமீனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.