தமிழக அமைச்சர் கூறியுள்ள தகவல் மாணவ மாணவியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற தலைப்பில் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்வு கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லையில் சாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது: “தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகின்றது. கல்வித்துறைக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் பள்ளிகளை திறந்தார். முத்தமிழ் கலைஞர் அதிக அளவில் கல்லூரிகளை திறந்தார். இதன் மூலம் இன்று தமிழகத்தில் அனைவரும் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமூக நீதியை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள். மாணவ மாணவியர்கள் எதிர்நீச்சல் போடும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும். இந்தியாவிலேயே தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது.
கல்வி பயில்வதில் பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு விருப்பமான பாடங்களை பயில்வதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி கனவு என்ற வழிகாட்டி நூல்களை வழங்கி, உதவி பெறும் 12 மாணவிகளுக்கு ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி கடன் உதவிகளை வழங்கினார். மேலும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் ,1354 விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விடுதிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.