கல்லறைத் தோட்டத்தை தோண்டி உடல்களை எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விஜயன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான முக்கால் சென்ட் இடம் ஒன்றில் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தபொழுது அவர்களுக்காக கல்லறை தோட்டம் ஒன்று அமைத்து அதில் தாத்தா, பாட்டி, தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து இருந்தார். அதோடு அங்கு கல்லறையும் கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு வந்த கும்பல் ஒன்று ஜேசிபி இயந்திரம் மூலமாக கல்லறையைத் தோண்டி அடக்கம் செய்யப்பட்ட சடலத்துடன் வாரியது. இதனை விஜயன் கேட்டபோது அந்த கும்பல் இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது என கூறியதோடு மாற்றுத்திறனாளி விஜயனை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டு 4 சடலத்தையும் அள்ளிச் சென்று விட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸிடம் விஜயன் புகார் அளித்துள்ளார். அதனை வாங்கிய ஆய்வாளர் விஜயனை தரக்குறைவாக பேசி புகாருக்கான ரசீது மட்டும் கொடுத்துவிட்டு எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் விஜயன் குடும்பத்துடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அதில் “எனது தாத்தா, பாட்டி, தந்தை, தாய் ஆகியோரின் உடலை மீட்டு எங்கள் கல்லறைத் தோட்டத்தில் முறைப்படி அடக்கம் செய்து தர வேண்டும். அதோடு இத்தகைய கொடும் செயலில் ஈடுபட்ட கும்பல் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளதாக மாற்றுத்திறனாளி விஜயன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்