உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.
திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வு. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது கணவர்களை வெளியில் அனுப்புவதற்கோ அல்லது நண்பர்களுடன் அனுப்புவதற்கோ அனுமதி வழங்குவதில்லை. திருமணத்திற்கு முன்பு சுதந்திரமாக தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆண்கள் திருமணத்திற்கு பின்பு வீட்டோடு அடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்பும் தங்கள் கணவரை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு உட்பட்ட கீழ் புதூர் பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரைவுரையாளராக உள்ளார். இவருக்கு கிரிக்கெட் என்பது மிகவும் பிடிக்கும். தனது கிரிக்கெட் அணியான சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவருக்கும் தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் நேற்று உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது நண்பர்கள் 20 ரூபாய் பாத்திரத்துடன் வந்து உங்களின் கணவனை திருமணத்திற்கு பின்பும் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும். வாரத்தில் சனி ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பத்திரத்தில் எழுதப்பட்டிருந்தது. இதற்கு சம்மதம் தெரிவித்த மணமகள் அதற்கு ஒப்புதல் தெரிவித்து அந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.