Categories
மாநில செய்திகள்

கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு கண்காட்சி…. பொதுமக்களின் கோரிக்கையால் கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

மெட்ராஸ் மாகாணம் என்ற பெயருக்கு பதிலாக கடந்த 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. இந்த ஜூலை 18-ம் தேதி இனி தமிழ்நாடு தின விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை மற்றும் நில அளவியல் துறை சார்பாக சிறப்பு கண்காட்சி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்‌.

இந்த கண்காட்சியில் கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகலை, ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மக்கள் பயன்படுத்திய ஈமச்சடங்கு மட்கலன்கள், உறை கிணறு, வெள்ளி முத்திரைகள், தங்க நாணயங்கள், பவள மணிகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் குழாய்கள் மற்றும் மண்பாண்டங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நில அளவை மற்றும் பதிவேடு துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய வரைபடங்கள் மற்றும் மொழி வாரி மாகாணத்தின் வரைபடங்கள், தமிழ்நாடு வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இலவசமாக பார்த்து செல்லலாம். மேலும் பொதுமக்கள் கோரிக்கைக்கு இணைந்த கண்காட்சியானது ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |