நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கி அதன் மூலம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறும்போது, “எனது பெயரில் ஒரு போலியான மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலமாக ‘ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’என்று நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்ட அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் என்னை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போதுதான் இது எனக்கு தெரியவந்தது.
அது மட்டுமன்றி சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியது கண்டறியப்பட்ட உடன் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தவறான செயலில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்”என்று அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறுகையில், “ஆட்சியர் பெயரில் தொடங்கப்பட்ட போலியான மின்னஞ்சலில் இருந்து எங்கிருந்து குறுஞ்செய்தி அனுப்ப பட்டது என்பது பற்றி ஐபி முகவரி தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. அது கண்டறியப்பட்ட உடன் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். செல்போன்களில் ஹைபர்லின்க், கியூ ஆர் கோட் ஆகியவற்றை சிலர் அனுப்பி மற்றவர்களின் செல்போன்களில் உள்ள தகவலை திருடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.