கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஜமுனாமரத்தூர், புதுப்பாளையம், கலசபாக்கம் ஆகிய ஊர்கள் இடம்பெற்றுள்ளன. திருமா முனீஸ்வரர் கோவில், பூண்டி மகான் ஆசிரமம், படைவீடு ரேணுகாம்பாள் கோவில், புகழ்பெற்ற பருவதமலை, மல்லிகார்ஜுனர் சன்னதி, வில்வாரணி நட்சத்திர கோவில், கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் கொண்ட ஜவ்வாது மழை உள்ளிட்டவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும்.
கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 5முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வாகை சூடி இருக்கிறார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. பன்னீர்செல்வம் வென்றார். கலசபாக்கம் தொகுதியில் மொத்தம் 2,48,798 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் பெண் வாக்காளர்கள் அதிகம்.
கரும்பு, நெல், மஞ்சள், மணிலா என விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ளது இத்தொகுதி. வில்வாரணி போன்ற சில கிராமங்களில் பட்டு நெசவு தொழில் நடைபெறுகிறது. விவசாயம் முக்கிய தொழிலாக என்றாலும் செண்பகத்தோப்பு மற்றும் மிருகன்டா நீர் தேக்க திட்டங்கள் பயன் அளிக்கவில்லை என்பது தொகுதி மக்களின் குமுறல்.
வறட்சியாலும், வேலைவாய்ப்பின்மையாலும் இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருகாலத்தில் ஜவ்வாது சந்தனம் என்று பெயர்பெற்ற ஆயிரக்கணக்கான சந்தன மரங்களை கொண்டிருந்த ஜவ்வாதுமலை அந்த பெருமையை அடியோடு இழந்து நிற்கிறது. ஜமுனாமரத்தூர் சுற்றுலா தளமும் பயணிகல் இன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.
கூலிக்கு ஆசைப்பட்டு மலைவாழ் மக்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்று உயிரிழப்பதும், கைது செய்யப்படுவதும் தொடர்கிறது. படைவீடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்ல சரியான போக்குவரத்து வசதி இல்லை, குடிநீர் பிரச்சனை, அரசு கல்லூரி கிடையாது, கலசபாக்கம் பேருந்து நிலையம் அமைப்பது என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் அடுக்குகின்றனர். இப்படி நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்குமா என தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்