ரோபோடிக் உதவியுடன் ஒரேநேரத்தில் பிரசவம் மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு தாயையும், குழந்தையையும் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.
சென்னையை சோ்ந்த மருத்துவா் திவ்யதா்ஷினி(27) கா்ப்பமாக இருந்த போது இடது சிறுநீரகத்தில் பெரியகட்டி இருந்தது. இதனால் இருஉயிா்களையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் திவ்யதா்ஷினி சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவரைப் பரிசோதித்த சிறுநீரகவியல், மகப்பேறியல் சிறப்பு நிபுணா் மீரா, சிறுநீரகவியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் ராகவன் போன்றோர் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற ஒரே நேரத்தில் பிரசவம் மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டனா்.
அந்த வகையில் முதுகுத்தண்டில் உணா்விழப்பு மருந்தை செலுத்தி மகப்பேறுக்கான சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உடனே ரோபோடிக் முறையில் இடது சிறுநீரகத்தில் இருந்த கட்டியும் அகற்றப்பட்டது. இதன் காரணமாக தாயும், குழந்தையும் எந்தவித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டனா். இது தொடர்பாக மருத்துவர்கள் ராகவன், மீரா போன்றோர் கூறியதாவது, நோயாளியின் இடது சிறுநீரகத்தில் இருந்து புற்றுநோய்க் கட்டிக்கு சிகிச்சையளிக்கும் அதே வேளையில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் குழந்தையை பிரசவிக்க செய்வது கட்டாயமானதாக இருந்தது.
பல்வேறு துறை மருத்துவர்களும் இணைந்து சிறப்பான அணுகுமுறையால் பிரசவத்தோடு சோ்த்து சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டியும் அகற்றுவது சவாலாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக மேற்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகளவில் இது போன்று அறுவை சிகிச்சை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு இருப்பது இதுவே முதன் முறை என்று அவா்கள் தெரிவித்தனா்.