அழகன்குளம் கடற்கரை பகுதியில் சுமார் 2 டன் எடை கொண்ட திமிங்கலம் ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் ஆமை, கடல் பசு, டால்ஃபின் போன்ற அரிய வகை மீன்கள் மீன்களும், கடலின் ஆள் கடல் பகுதியில் திமிங்கலம் போன்ற உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் அழகன்குளம் கடற்கரையில் பெரிய திமிங்கலம் ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனபாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த வனபாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனசரக அலுவலர் ஜெயபஸ், வனவர் சடையாண்டி மற்றும் பாதுகாப்பு படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து கடற்கரையில் இறந்து கிடந்த திமிங்கலத்தை பார்வையிட்டு அதனுடைய எடை, நீளம், அகலம் ஆகியவை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது உயிரிழந்த திமிங்கலம் சுமார் 2 டன் எடையும், 11 மீட்டர் நீளமும் இருந்துள்ளது. மேலும் அந்த திமிங்கலத்தை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்துள்ளார். இதற்குபின் கடற்கரை பகுதியிலேயே குழி தோண்டப்பட்டு திமிங்கலத்தை பாதுகாப்பாக புதைத்துள்ளனர். இதற்கிடையே அப்பகுதி பொதுமக்கள் பெரிய திமிங்கலத்தை மிகவும் ஆர்வத்தோடு பார்த்து சென்றுள்ளனர்.