ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பியதால் மீன்விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 300 விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ் கடலுக்கு செல்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பலத்த காற்று வீசியதால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை ஓய்ந்து, காற்றின் வேகம் குறைந்ததால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றனர். இதில் 58 விசைப் படகுகள் நேற்று கரைக்கு திரும்பியது.
இதில் டோக்கன்கள் என்ற முறையில் படகுகளில் இருந்து மீன்கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று கிளி மீன்கள், நாகக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் போன்றவைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைத்தும் முன்பு இருந்ததை விட குறைந்த விலைக்கு விற்பனையானதால் மீனவர்கள் சற்று கவலை அடைந்தனர்.