தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கருப்பு பூஞ்சை நோயால் மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும், இது கொரோனாவிற்கு முன்னதாகவே கண்டறியப்பட்ட ஒரு நோய் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும், இந்த கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி 9 பேர் கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் இதுவரை எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது தவறான தகவல் என்றும் தெரிவித்துள்ளார்.