பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை தாலுகா மேட்டுபாளையத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு சென்ற 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்னிகா, வர்ஷினா என 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 3வதாக அனிதா கர்ப்பமடைந்தார். இதையடுத்து 4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா கடந்த மே மாதம் 5ஆம் தேதி ராமநத்தத்திலுள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்து வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்துள்ளார்.
அப்போது பெண் குழந்தை என்பது தெரியவந்தது. அதன்பின் அனிதா கருக்கலைப்பு செய்வது என முடிவுசெய்து மெடிக்கல் உரிமையாளரான கச்சிமைலூரை சேர்ந்த சீத்தாராமன் மகன் முருகன்(50) என்பவர், அவருக்கு கருக்கலைப்பு செய்து இருக்கிறார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளான அனிதாவை, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு முருகன் தலைமறைவாகி விட்டார்.
இதனிடையே அனிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீர் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடிவந்தனர். எனினும் அவர் 2 மாதமாக தலைமறைவாகவே இருந்துவந்தார். இந்நிலையில் அவர் சிறுபாக்கம் அருகேயுள்ள காப்புகாட்டில் பதுங்கி உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜம்பு லிங்கம் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று முருகனை மடக்கிபிடித்து கைது செய்தனர்.