சென்னை அருகே செய்யாறு வெள்ளத்தில் உடைந்துபோன பாலத்தில் மக்கள் கடந்து செல்வது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் செய்யாறு வெள்ளத்தில் 80% உடைந்துபோன பாலத்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கிராம மக்கள் நடந்து செல்கின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் அந்த தரைப்பாலம் கனமழை காரணமாக முற்றிலும் சேதமடைந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் குறைந்தும் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால் அங்குள்ள தரைப்பாலம் 80 சதவீதத்திற்கும் மேலாக சுக்குநூறாக உடைந்து மக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அப்பகுதிக்கு செல்லும் மக்கள் 35 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும், வயதானவர்களும் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து செல்கின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கைக்குழந்தையுடன் உடைந்துபோன பாலத்தின் மீது ஏறி அக்கரையில் இருந்து இக்கரைக்கு வருகின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் உடனடியாக போலீசார் பணியில் அமர்த்தி பொதுமக்கள் யாரும் அங்கு செல்லாத வண்ணம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.