Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!!

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலுள்ள 4 அடுக்குமாடி கட்டிடத்தின் வளாகத்தில் முதல் மாடியில் தனியார் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் ஒன்று இருக்கிறது. இந்நிறுவனத்திற்கு தரையை அழகுப்படுத்தும் வேலையான தரைவிரிப்பு போட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத்(34) மற்றும் சத்தியமூர்த்தி(41) ஆகிய 2 கட்டிட தொழிலாளிகள் வந்தனர். இதையடுத்து இரவு பணியை முடித்துவிட்டு கட்டிட தொழிலாளிகள் இருவரும் அதே அறையில் தங்கி உறங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3:45 மணியளவில் அறை முழுதும் திடீரென்று கரும்புகை பரவி, தீ பற்றி மளமளவென எரிய துவங்கியது. இதன் காரணமாக அதிகளவு கரும்புகை கட்டிடத்திலிருந்து வெளியேறியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதியில் சென்றவர்கள், உடனே காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த எழும்பூர், வேப்பேரி, மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்புதுறையினர் சுமார் ½ மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே அறையில் உறங்கிகொண்டிருந்த 2 பேரும், தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அதன்பின் அவர்களது உடல்களை தீயணைப்புதுறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதற்கிடையில் உயிரிழந்த கோபிநாத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. பின் சத்தியமூர்த்தி சென்ற 10 வருடங்களாக தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். நடந்த தீ விபத்தில் நிறுவனத்தின் பல்வேறு கம்ப்யூட்டர் உபகரணங்கள், பிரிண்டர்கள்  ஆகிய பொருட்கள் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |