Categories
மாநில செய்திகள்

கனமழை, வெள்ளம்…. நோய் பரவும் அபாயம்… அவதிப்படும் மக்கள்!!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு கோவிந்தபுரம், கேம்.கார்டரன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பட்டாளம், புளியந்தோப்பு, கோவிந்தபுரம், கே. எம். கார்டன், தட்டான் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கடந்த 1 வார காலத்திற்கு மேலாக மழை நீர் வடிய வழி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி இருப்பதால் பல்வேறு நோய்த் தொற்று பரவும் எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், பேடிசி கோட்ரஸ் ,ராயப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்து மழைநீர் 3வது நாளாக இன்றும் வடியாத நிலையிலேயே உள்ளது.

அப்பகுதியில் இருந்து இதுவரை 200க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உணவுப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் 3-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

2 நாட்களில் 30 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முடிச்சூர் சுற்றியுள்ள 14 ஏரிகளும் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் நீர் இப்பகுதியை சூழ்ந்துள்ளது எனவும் கூறிய பருவ மழைக்கான சிறப்பு அதிகாரி அமுதா மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து கல்குவாரியில் சேமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய பிரதான ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. பருவமழை காரணமாக பெய்த தொடர் மழையால் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, கொள்ளளவு 85 சதவீதத்தை தாண்டியது. அதேபோல் ஏரியின் நீர் மட்டம் உயர்வான 24 அடியில் 22 அடியை எட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து கல்குவாரியில் சேமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை கல்குவாரி க்கு கால்வாய் வழியாகக் கொண்டு வந்தால் வறட்சி ஏற்படும். கல் குவாரியில் இருந்து தண்ணீரை சேமிக்கலாம். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக கல்குவாரிக்கு தண்ணீரை கொண்டு வரும் கால்வாய்களை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கூறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை கல்குவாரிக்கு கொண்டு செல்லும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்தனர்.

மணலி சுற்றுவட்டார சாலையில் தேங்கி நிற்கும் மழை நீராலும், புழல் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீராலும், போக்கு வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக புழல் ஏரியில் இருந்து 3 ஆயிரத்து 200 கனஅடி உபரி நீர் கால்வாயில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் தரைப்பாலங்கள்  அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் மணலி விரைவு சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகனங்கள் இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உபரி நீர் கால்வாய்கள் தூர் வாரப்படாததால் அதில் தண்ணீர் செல்லமுடியாமல் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது புழல் ஏரிக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளதால், உபரி நீர் திறப்பு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணை உடைந்து, நீர் முழுவதும் கரையோர கரும்பு நிலத்தில் புகுந்ததால் தளவானூர் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஓராண்டுக்கு முன்பாக விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எடதிரி மண்டலத்திற்கும் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.

தடுப்பணை கட்டிய 1 மாதத்திற்குள்ளாகவே பெய்த கனமழை காரணமாக தடுப்பணைகளின் ஒரு பகுதியான எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள கதவணைகள் ஒன்று உடைப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் தொடர் மழை காரணமாக தடுப்பணையில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் நீர் முழுவதும் கரையோர கரும்பு நிலத்தில் புகுந்ததால் தளவானூர் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள களவகுண்டா அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால் பொன்னை தரைப்பாலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தம் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் உள்ள சித்தூரில் கலவ குண்டா அணை அமைந்துள்ளது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை வழியாக பாயும் நீரின் பொன்னையாற்றில் அளவு அதிகரிக்கும் என்பதால் தற்போதைக்கு பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி இன்று இரவு 8.30மணிக்கு மேல் அனைத்து வகை வாகனங்களுக்கும் தடை விதித்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றின் கரையை ஒட்டியே 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |