Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து…. பயணிகள் குளிக்க தடை….!!!!

கர்நாடக மற்றும் கேரளமாநில பகுதிகளில் சென்ற சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 26 ஆயிரத்து 143 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 51 ஆயிரத்து 143 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் நேற்று முன்தினம் மதியம் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியே தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இதன் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை பிலி குண்டுலுவிலுள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

காவிரிஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன்கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்திருக்கிறார். இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மற்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் நடைபாதைக்கு போகும் நுழைவு வாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் காவிரி கரையோரம் பரிசல்கள் கவிழ்த்து போடப்பட்டுள்ளது.

Categories

Tech |