கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று (04.11.22) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று மதியம் முதல் தொடங்கி பெய்து வரும் மழையால் அரசு பள்ளிகள், தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் எல்லாம் மழை நீரால் மூழ்கி இருக்கிறது. எனவே சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (04.11.2022) மற்றும் நாளை (05.11.2022) இரு நாட்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.