கந்துவட்டி புகாரின் பேரில் போலீசார் பைனான்ஸ் அதிபரை கைது செய்தார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே இருக்கும் இடையார்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவர் பைனான்ஸ் அதிபர் சதீஷ்குமார் என்பவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாணிக்கம் மாதம் தோறும் வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக தொழில் சரியாக இல்லாத காரணத்தினால் சரியாக வட்டி பணத்தை கொடுக்க முடியவில்லை.
இதனால் சதீஷ்குமார் வட்டி பணத்தை கேட்டு தொடர்ந்து தொல்லை அளித்திருக்கின்றார். இதனால் தொல்லை தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் மாணிக்கம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார்கள். மேலும் அவர் கணக்கில் வராமல் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்தது தெரிந்தது. இந்த பணத்தை அவர் கந்து வட்டிக்கு கொடுக்கும் நோக்கில் வைத்திருந்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.